Social Icons

Sunday 27 October 2013

சிரியாவில் நடப்பது உள்நாட்டுப் போர் அல்ல – கொள்கை சார்ந்த யுத்தம்

மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி எங்கெல்லாம் முஸ்லிம்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் ஏதோ ஒரு வகையில் முஸ்லிம்களை அழிக்கும் படலம் நடை பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது.
ஈராக், ஆப்கானிஸ்தான், செச்னியா, சோமாலியா, பர்மா (மியன்மார்), பாகிஸ்தான், பலஸ்தீன், எகிப்து என முஸ்லிம்களுக்கு எதிரான யுத்தம் நடக்கும் நாடுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
அந்த வகையில் தற்போது சிரியாவிலும் முஸ்லிம்களை அழிக்கும் படலம் ஆரம்பமாகியுள்ளது.
 முஸ்லிம்கள் தொடர்ந்தும் அழிக்கப்படுவது ஏன்?
தொடர்ந்தும் பல நாடுகளில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றார்கள். தற்போது சிரியாவிலும் அதன் தொடர்ச்சி ஆரம்பமாகியுள்ளது. இப்படி உலகம் முழுவதும் முஸ்லிம்கள் அழிக்கப்படுவதற்கான காரணம் என்னவென்பதை பற்றி நபியவர்கள் தெளிவாக நமக்கு உணர்த்திவிட்டு சென்றிருக்கின்றார்கள்.
“உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போல் ஒவ்வொரு திக்கிலிருந்தும் பிற சமுதாயங்கள், உங்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்றிட அழைத்திடும் கட்டம் வரும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அன்றைய தினம் நாங்கள் சிறுபான்மையாக இருப்போம் என்பதாலா?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அந்நாளில் நீங்கள் பெரும்பான்மையாகவே இருப்பீர்கள். எனினும் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று ஆகி விடுவீர்கள். உங்கள் விரோதியின் உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) அச்சம் கழன்று விடும்! உங்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் “வஹ்னை‘ ஏற்படுத்தி விடுவான்” என்று பதிலளித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! வஹ்ன் என்றால் என்ன?” என்று நாங்கள் கேட்டோம். “உலகத்தை நேசிப்பது;மரணத்தை வெறுப்பது” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி), நூல்: அஹ்மத் 21363
மேற்கு நாடுகள் முஸ்லீம்கள் வாழும் நாடுகளின் மீது காரணமே இல்லாமல் தாக்குதல்களை தொடுக்கின்ற போதும் முஸ்லீம் ஆட்சியாளர்களாக தங்களைக் கூறிக் கொள்பவர்கள் யாரும் அவற்றை கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.
கேட்டால் அது உள்நாட்டுப் பிரச்சினை நாங்கள் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்கிறார்கள். இதைத் தான் நபியவர்கள் மேற்கண்ட செய்தியின் மூலம் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள்.
“உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போல் ஒவ்வொரு திக்கிலிருந்தும் பிற சமுதாயங்கள், உங்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்றிட அழைத்திடும் கட்டம் வரும்”  என்று நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த நேரத்தில் முஸ்லீம்கள் குறைவாகவா இருப்பார்கள் என்று நபி்த் தோழர்கள் கேட்கும் போது இல்லை, நீங்கள் நிறையப் பேர் இருப்பீர்கள் என்கிறார்கள்.
இன்று உலகில் 135 கோடிக்கும் அதிகமாக வாழக்கூடிய பெரும் சமுதாயத்தினராக முஸ்லீம்கள் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் எந்தத் தலைவருமோ அல்லது எந்த சமுதாயமுமோ எதிரிகளுக்கு எதிராக தங்கள் பலத்தை வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை. காரணம் அவர்களின் உள்ளங்களில் ஏற்பட்டுள்ள உலக மோகமே.
மரணத்தைப் பற்றிய பயம் அவர்களை ஆட்கொண்டிருக்கிறது. உலக வாழ்வைப் பற்றிய ஆசை அவர்களை மிகைத்திருக்கிறது. இப்படி வாழும் போது நம்மை எதிர்ப்பவர்களுக்கு நாம் அடிமைப் படுவதைத் தவிர வேறு வழி இல்லை.
இன்று எத்தனையோ முஸ்லிம் நாடுகள் அடிமைப்படுத்தப்பட்டும், முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள் எதிரிகளினால் முடுக்கிவிடப்பட்டும் எந்த முஸ்லிம் தலைவர்களும் இவற்றுக்கு எதிராக குரல் கொடுக்க முன்வருவதில்லை. காரணம் உலக மோகமும், மரண பயமும் தான் என்பதை மேற்கண்ட ஹதீஸின் மூலம் நாம் தெளிவாக உணர முடிகின்றது.
இப்போது சிரியாவின் பிரச்சினையின் உண்மைத் தன்மையைப் பற்றி அலசுவோம்.
சிரியா அமைவிடமும், அரசியல் சூழலும்.
சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும், தென்மேற்கில் இஸ்ரேலையும், ஜோர்தானையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா பிரான்சிடமிருந்து 1936 இல்  விடுதலை பெற்றது. இதன் தலைநகரான டமஸ்கஸ்  உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும்.
வரலாற்றில் பல ஆட்சி மாற்றங்களை சந்தித்த சிரியாவை கடைசியாக ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்து ஹிஜ்ரி 12 ல் அபூபக்கர் (ரலி) தலைமையிலான இஸ்லாமிய கிலாபத் ஆட்சியில் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தலைமையிலான இஸ்லாமியப் படை சிரியாவின் தென்மேற்கு பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. அதன் பின் அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்கள் தலைமையிலான படை டமஸ்கஸ் உள்ளிட்ட முழு சிரியாவையும் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
அன்றைய சிரியாவின் இஸ்லாமிய ஆளுனராக முஆவியா (ரலி) அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். உமையாக்களின் ஆட்சியில் சுமார் 90 வருடங்கள் சிரியாவின் தலை நகராக டமஸ்கள் இருந்தது.
முதலாம் உலகப் போரின் தாக்கத்தினால் துருக்கி வீழ்ச்சி அடைந்த காரணத்தினால் பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் மேற்கு நாடுகளின் “கண்காணிப்பு நாடுகளாக” மாற்றப்பட்டன. இதனடிப்படையில் சிரியா பிரான்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.
பிரான்சின் கட்டுப்பாட்டின் கீழிருந்த சிரியா 1941 ல் சுதந்திரம் பெற்று, 1945 ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல் மூலம் தேசிய அரசாங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டது. சுக்ரி குவைலித் என்பவர் தேசிய அரசாங்கத்தின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். 1958 ம் ஆண்டு எகிப்துடன் இடம்பெற்ற ஓர் ஒப்பந்ததத்தின் மூலம் எகிப்து, சிரியா ஆகிய இரண்டு நாடுகளும் ஐக்கிய அரபு குடியரசு என்று தங்களை அறிமுகப்படுத்தின. தொடர்ந்து 1961 ல் இராணுவ சபை ஒன்று உருவாக்கப்பட்டு சிரியா எகிப்தில் இருந்து பிரிந்து தனி நாடாக மாறியது.
தனி நாடாக மாறிய சிரியாவின் ஜனாதிபதியாக நாசிம் அல் குத்ஸி தேர்வு செய்யப்பட்டார். 1963 மார்ச் மாதம் 08 ம் திகதி அன்று சிரியாவின் இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் ஹாபிஸ் அல் அஸத் இராணுவப் புரட்சியின் மூலம் சிரியாவின் ஆட்சியாளராக மாறினார்.
1963 ல் ஆட்சியாளராக மாறிய ஹாபிஸ் அல் அஸத் 2000 ம் ஆண்டில் தான் மரணிக்கும் வரையில் சிரியாவின் ஆட்சியாளராக இருந்தார்.
சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம்களாவர், மேலும் 16% ஏனைய குழுக்களையும், 10% கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது. 1963 இலிருந்து பாத் கட்சி நாட்டை ஆண்டு வருகின்றது. கடந்த 1970 முதல் நாட்டின் தலைவர் அசாத் குடும்பத்தை சேந்தவராக காணப்படுகிறார்.
2000 ம் ஆண்டு ஹாபிஸ் அல் அஸத் மரணித்ததைத் தொடர்ந்து அவரின் புதல்வர் பஷர் அல் அஸத் ஆட்சியாளராக மாறினார்.
என்றைக்கும் அஸத் (Asad For Ever).
பஷர் அல் அஸாத்தின் தந்தை ஹாபிஸ் அல் அஸாத் மரணிக்கும் வரையில்  என்றைக்கும் அஸத் (Asad For Ever) என்ற ஒரு கொள்கையை கடைப்பிடித்தார். இதன் மூலம் சிரியாவை ஆளும் தகைமை அஸாத்தின் குடும்பத்தினருக்கு மாத்திரம் தான் உண்டு என்பதை அவர் அறிவித்தார்.
1963 ல் இருந்து இன்று வரைக்கும் அஸாத்தின் பாத் கட்சியே சிரியாவின் ஆளும் அரசாக இருந்து வருகின்றது.
என்றைக்கும் அஸத் (Asad For Ever) என்ற இந்தக் கொள்கையின் மூலம் உருவாக்கப்பட்ட சிரியாவின் அரசியலமைப்பு சட்டத்தின் படி 60 சதவீதமான பாராளுமன்ற ஆசனங்கள் பாத் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடந்தாலும், நடக்காவிட்டாலும் பாத் கட்சியினர் அறுபது சதவீதமானவர்கள் பாராளுமன்ற அங்கத்தவர்களாக இருப்பார்கள்.
மீதமுள்ள 40 சதவீதமான பாராளுமன்ற ஆசனங்களுக்கு மாத்திரமே தேர்தல் நடத்தப்படும். இதன் மூலம் சிரியாவின் நிறந்தர ஆட்சியாளர்களாக ஆளும் பாத் கட்சியினர் அதாவது அஸாத்தின் குடும்பத்தினர் மாத்திரமே இருப்பார்கள் என்பதே என்றைக்கும் அஸத் (Asad For Ever) என்ற கொள்கையின் சாராம்சமாகும்.
பாத் கட்சி + அலவியாக்கள் = ஷீயாக்கள்.
சிரியாவை ஆளும் பாத் கட்சியினர் ஷீயாக்களின் நுஸைரிய்யா பிரிவைச் சார்ந்தவர்களாவர். நுஸைரிய்யாக்களில் அலவிய்யா தரீக்காவை சேர்ந்தவர்களே இந்த அஸத்தின் குடும்பத்தினராவர். இந்த நுஸைரிய்யாக்கள் சுன்னி முஸ்லிம்கள் தொகையில் வெரும் 5 சதவீதத்தினர் மாத்திரமே!
நுஸைரிய்காக்களைப் பொருத்தவரையில் இவர்களின் நம்பிக்கைகும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை எனலாம்.
நுஸைர் என்பவனின் பெயரை வைத்து ஆரம்பிக்கப்பட்ட இக்கொள்கையை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள். அலி (ரலி) அவர்களை கடவுள் என்றும், பாத்திமா (ரலி) அவர்களை தெய்வீக தன்மை மிக்கவர் என்றும் வாதிடுகின்றார்கள். நபியவர்களின் அருமைத் தோழர்களை கடுமையாக விமர்சிக்கும் இவர்கள், அஹ்லுஸ் சுன்னாக்களின் வணக்க வழிபாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என மறுக்கின்றார். அதே போல் நபியின் மனைவிமார்களான முஃமீன்களின் அண்ணையர்களை விபச்சாரிகள் என்றும் தூற்றுகின்றார்கள்.
பெரும்பான்மை சுன்னி முஸ்லிம்களை கொண்ட ஒரு நாட்டில் சிறுபான்மைச் சமூகமாகவுள்ள ஷீயா அலவிய்யாக்கள் கடந்த ஐம்பது வருடங்களாக சிரியாவை ஆளும் ஆட்சியாளர்களாக இருக்கின்றார்கள்.
சிரியாவில் நடப்பது உள்நாட்டுப் போர் அல்ல – கொள்கை சார்ந்த யுத்தம்.
இன்று உலகளவில் பல நாடுகளிலும் பலவிதங்களில் முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றார்கள். இதில் சில நாடுகளில் உள்நாட்டு யுத்தங்களும், இன்னும் சில நாடுகளில் அமெரிக்க போன்ற நாடுகளின் வல்லாதிக்கத்திற்கெதிரான யுத்தமும் நடை பெற்று வருகின்றது.
இந்த இரண்டு விதமான யுத்த முறைகளையும் தாண்டி சிரியாவில் நடக்கும் யுத்தத்தை நாம் நோக்க வேண்டியுள்ளது. அதாவது சிரியாவில் உள்நாட்டு யுத்தம் கடந்த 2 வருடங்களைத் தாண்டி நடைபெற்று வருகின்றது. அதிபர் அஸாத்தின் படைக்கும், கிளர்ச்சிப் படை என்று அறியப்படுபவர்களின் படைக்கும் இடையே நடக்கும் இந்த யுத்தத்தைத் பொருத்த வரையில் வெருமனெ உள்நாட்டு யுத்தம் என்று தட்டிக் கழித்து விட முடியாது ஒன்றாகும்.
காரணம் சிரியாவில் உள்நாட்டு யுத்தம் என்று பேசப்படும் இந்த யுதத்தத்தின் பின்னனி கொள்கை சார்ந்ததாகும். சிரியாவின் அரச படைக்கு எதிராக போராடும் கிளர்ச்சிக் குழுவினர் சுன்னி முஸ்லிம்களாக அறியப்படுகின்றார்கள். சிரிய அரச படை ஷீயாக்களுக்காக, அதிபர் அஸாத்துக்காக போராடுகின்றது. ஆக மொத்தத்தில் சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தம் என்பது வெருமெனே ஆட்சி கவிழ்ப்புக்கான யுத்தம் மாத்திரம் அல்ல. கொள்கை சார்ந்த யுத்தமும் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஷீயாக்களின் ஆதரவு பெற்ற சிரிய அதிபர்.
சிரியாவின் அதிபர் பஷர் அல் அஸாத்திற்கு எதிரான அல்லது ஷீயா அரசுக்கு எதிரான சிரியாவின் உள்நாட்டுப் போர் கடந்த இரண்டு வருட காலமாக முடிவுக்கு வராமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
லிப்யா, டியுனிஷியா, எகிப்து போன்ற நாடுகளில் ஏற்பட்ட அரபு வசந்தப் புரட்சிகள் முடிவுக்கு வந்து ஆட்சி மாற்றங்கள் வந்த பின்னும் சிரியாவின் உள்நாட்டு புரட்சி இன்னும் முடிவுக்கு வராமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி பரவலாக முன்வைக்கப்படுகின்றது.
சிரியாவின் ஆளும் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் போராட்டத்திற்கு எதிராக சிரியாவின் ஆட்சியாளர் பஷர் அல் அஸாதுக்கு ஆதரவாக அஸாதின் ஆட்சியை தக்க வைப்பதற்காக ஷீயாக்கள் பாரிய அளிவில் தங்கள் உதவிகளை வழங்கி வருகின்றார்கள்.
சிரியாவின் நேச நாடான ஈரான் தனது முழுப் பங்களிப்பையும் வழங்குவதின் மூலம் அஸாத்தின் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக உதவுகின்றது. அதே போல் லெபனானை தலைமையகமாக கொண்டு இயக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற இயக்கமான ஹிஸ்புல்லாஹ் ஷீயாக்கள் தொடர்ந்தும் அஸதின் படைக்கு தங்கள் உதவியை வழங்கி வருகின்றார்கள்.
“ஹுஸைன் (ரலி) அவர்கள் கொலை செய்தவர்களின் பரம்பரையையே அழிப்பதற்கான யுத்தம் ஆரம்பித்துவிட்டது” என்று (உண்மையில் ஹுஸைன் (ரலி) அவர்களை கொலை செய்த ஷீயாக்களின் இயக்கமான) ஹிஸ்புல்லாஹ்வின் தலைவரான ஹஸன் நஸ்ருல்லாஹ் அண்மையில் ஓர் அறிக்கையை விட்டிருந்ததையும் காண முடிந்தது. இதன் மூலம் சுன்னி முஸ்லிம்களை அழிக்கும் ஒரு யுத்தமாகவே ஷீயாக்கள் சிரியாவின் யுத்தத்தை முன்னெடுக்கின்றார்களே தவிர வெரும் உள்நாட்டுப் போராக இதனை அவர்கள் முன்னெடுக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எதிர் கட்சிகளின் கூட்டமைப்பு.
சிரியாவின் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளார்கள். சிரிய புரட்சியாளர்களின் தேசிய கூட்டமைப்பு (National Coalition For Syrian Revolutionary and Opposition) என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இக் கூட்டமைப்பின் தலைவராக 52 வயதான முஆஸ் கதீப் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இக்கூட்டமைப்பில் சுமார் நான்கு எதிர் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
அரபு நாடுகளின் ஒன்றியமான “அரப் லீக்” இவ்வமைப்பையே சிரியாவின் தற்போதைய ஆட்சிக்குறிய அமைப்பாக அங்கீகரித்துள்ளது.
மனித நேயமற்ற மரணத் தாக்குதல்கள்.
2011 ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இது வரை சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொள்ளபட்டுள்ளனர். இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட அனைத்துத் தீர்மானங்களையும் சீனா, மற்றும் ரஷ்யா ஆகியவை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்துள்ளன. இதன் மூலம் அஸாத்தின் அடாவடியான மக்கள் படுகொலைக்கு சீனாவும், ரஷ்யாவும் தனது ஆதரவை தொடர்ந்த வழங்கி வருகின்றன.
இறுதியாக கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக நடத்தப்பட்ட இரசாயனத் ஆயுதத் தாக்குதலில் சுமார் 1400 பேர்கள் வரை கொல்லப்பட்டார்கள்.
உலகின் அதிகமான அகதிகளை உருவாக்கிய யுத்தம்.
இன்றைய உலகின் அதிகமான அகதிகளை உருவாக்கிய ஒரு யுத்தமாக சிரியாவின் உள்நாட்டு யுத்தம் அவதானிக்கப்படுகின்றது. சுமார் இருபது இலட்சம் பேர் வரையில் இது வரைக்கும் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். இவர்கள் லெபனான், ஜோர்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் தஞ்சமடைகின்றார்கள்.
சிரியா மக்களுக்காக கண்ணீர் வடிக்கின்றதா அமெரிக்கா?
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் சிரியாவின் உள்நாட்டு யுத்தம் தொடர்பாக தொடர் மௌனம் காத்துவந்த அமெரிக்கா தற்போது சிரியாவின் விஷயத்தில் அதி கூடிய கவனம் எடுப்பதாக காட்டிக் கொள்ள முனைகின்றது.
சிரியாவின் அதிபர் அஸாத் உள்ளிட்ட ஆளும் பாத் கட்சியின் அரசு கவிழ்க்கப்பட்டு, புதிய நேர்மையான அரசாங்கம் ஒன்று சிரியாவில் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்த வேலையில் அமெரிக்கா இறங்கக் கூடாது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்புமாகும்.
அஸாத்தின் படையினால் நிகழ்த்தப்பட்ட இரசாயன ஆயுதத் தாக்குதல் தொடர்பில் அஸாத் விசாரிக்கப்பட வேண்டியவர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது. ஆனால் அஸாத் எந்தளவுக் கொடூரமான காரியத்தில் ஈடுபட்டாரோ அதைவிட கொடூரமான படுகொலைகளை ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இன்றும் அமெரிக்கா செய்து வருகின்றது. என்பது தெளிவானதாகும்.
அஸாத் தண்டிக்கப்பட வேண்டியவர் என்பது எந்தளவுக்கு உண்மையானதோ அதே அளவுக்கு அஸாத்தைத் தண்டிப்பதற்கு அமெரிக்காவுக்கு எவ்வித தகுதியும் இல்லை என்பதும் உண்மையானதாகும்.
ஈராக்கில் இரசாயண ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி ஈராக் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா இன்று வரைக்கும் அங்குள்ள மக்கள் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுதான் வருகின்றது. அதே போல் அல்காயிதாவை இல்லாமலாக்கப் போகின்றோம் என்று கூறி ஆப்கானுக்குள் நுழைந்த அமெரிக்காவினால் இன்று வரைக்கும் மக்கள் அழிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
இப்படி உலகம் முழுவதும் சண்டித்தனம் செய்தவதினூடாக பொது மக்களை அழித்தொழிக்கும் காரியத்தில் ஈடுபடும் அமெரிக்கா சிரியாவை தண்டிப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் பொதுமக்கள் மீத அஸாத் இரசாயன தாக்குதல் நடத்தினார் என்பதினால் பொதுமக்களை காப்பதற்காக அமெரிக்கா சிரியாவை தாக்க முனைவதாக கூறப்படுவது சுத்தப் பொய்யான வார்த்தை ஜாலமாகும். எண்ணை வளத்தை அபகரிப்பதற்காக ஈராக்கினுல் நுழைந்ததைப் போல், கணிம வளத்தை அபகரிப்பதற்காக ஆப்கானுக்குள் நுழைந்ததைப் போல் சிரியாவின் குரூட் ஒயில், பெற்றொலியம் மற்றும் பருத்தி ஆகியவற்றை அபகரிப்பதற்காக தற்போது சிரியாவுக்குள்ளும் கால்பதிக்க நினைக்கின்றது அமெரிக்கா.
இஸ்ரேலை காப்பாற்றுவதற்கான இன்னொரு யுத்தம்.
அமெரிக்கா சிரியாவை தாக்குவதற்கான காரணத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக நாம் ஆய்வு செய்து பார்த்தால், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை உள்நுழைய விடாமல் இருப்பதும், சிரியாவில் கிடைக்கும் குரூட் ஒயில் போன்றவற்றை அபகரிக்க நினைப்பதும் ஒரு புறம் இருந்தாலும் இவற்றை விட முக்கியமான ஒரு விஷயம் அதில் அடங்கியுள்ளது.
அதுதான், இஸ்ரேலைக் காப்பாற்றுவதற்கான அமெரிக்காவின் திட்டமாகும். காரணம் என்னவென்றால் கடந்த இரண்டு வருடங்களாக சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்திற்கு எவ்விதத்திலும் அமெரிக்கா உதவவில்லை. லிப்யா, டியுனிஷியா போன்ற நாடுகளில் புரட்சி வெடித்த நேரத்தில் அங்கு புரட்சியில் ஈடுபட்ட புரட்சியாளர்களுக்கு உதவிய அமெரிக்கா சிரிய புரட்சியாளர்களுக்கு எவ்விதத்திலும் உதவவில்லை. மாறாக புரட்சியாளர்களுக்கு உதவுவது அல்காயிதாவுக்கு உதவுவதைப் போன்றாகிவிடும் என்று ஹிலாரி கிளின்டன் கதை அளந்தார்.
எந்தளவுக்கென்றால், லிப்யா, டியுனிஷியா விஷயத்தில் நவீன ஆயுதங்களைக் கொண்டு உதவிய அமெரிக்கா சிரியா விஷயத்தில் சிரிய ரக ஆயுதங்களைக் கொண்டு கூட உதவி செய்யவில்லை. காரணம் சிரியாவின் போராளிகளுக்கு வழங்கப்படும் ஆயுதம் அல்காயிதாவுக்கு உதவும் என்பதினால் அல்ல. குறித்த ஆயுதங்களின் மூலம் போராளிகள் வெற்றி அடைந்தால் அஸதிடம் இருக்கும் இரசாயன ஆயுதங்கள் அனைத்தும் இஸ்லாமியவாதிகளிடம் கிடைத்துவிடும் அதன்பின் நடக்கும் தேர்தலில் இஸ்லாமியவாதிகள் ஆட்சியைப் பிடிப்பார்கள். அவ்வாறு இஸ்லாமியவாதிகள் ஆட்சிக்கு வந்தால் அது இஸ்ரேலின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும். அதனால் தான் சிரியா விஷயத்தில் போராளிகளுக்கு அமெரிக்கா உதவவில்லை.
இதே நேரம் அஸதை தண்டிப்பதற்காக இப்போது அமெரிக்கா துடிப்பதும் இஸ்ரேலைப் பாதுகாக்க வேண்டும் என்பதினால் தான். தற்போதைய சிரியாவின் போராட்ட சூழலில் சிரியா நிலப்பரப்பில் சுமார் 60 வீதமானவை புரட்சிப் படை வசம் வீழ்ந்துவிட்டது. சிரியா முழுவதும் இருந்த சுமார் 20 விமானத் தளங்களில் 06 மாத்திரமே அஸாத் வசம் தற்போது எஞ்சியிருக்கின்றது. ஆக மொத்தத்தில் சிரிய புரட்சிப்படை வெற்றியை நோக்கி நகர்கின்றது என்பது அமெரிக்கா உள்ளிட்ட இஸ்ரேலிய ஆதரவு நாடுகளின் முடிவாகிவிட்டதினால் இப்போது சிரியா மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு அங்குள்ள இரசாயன ஆயுதங்களை கைப்பற்றுகின்றோம் என்ற பேரில் அமெரிக்காவுக்கு சாதகமான பொம்மை அரசு ஒன்றை அங்கு நிறுவிவிட்டால் இஸ்ரேலின் இருப்பு உறுதியாகிவிடும் என்பதினால் தான் இந்த தாக்குதல் முடிவுக்கு தற்போது அமெரிக்கா வந்துள்ளது.
இரசாயன ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டால் யுத்தம் நிறுத்தப்படும்.
சிரியாவில் இருக்கும் இரசாயன ஆயுதங்களை சிரியா ஒப்படைத்தால் தாக்குதல் நடத்தும் திட்டம் கைவிடப்படும் என்று அமெரிக்கா அறிவித்தவுடன், கடந்த 14.09.2013 அன்று அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இரசாயன ஆயுதங்களை சிரியா ஒப்படைக்கும் என்ற முடிவு எட்டப்பட்டிருக்கின்றது. எது எப்படியானாலும் இஸ்ரேலைப் பாதுகாக்கும் அமெரிக்காவின் திட்டம் நிறைவேறுகின்றது என்பது தெளிவான ஒன்று.
ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் சிரியாவை ஆதரிப்பது ஏன்?
சிரியாவுக்கு எதிரான யுத்தத்தைத் தடுப்பதற்காக ரஷ்யாவும், சீனாவும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. எந்தளவுக்கென்றால் சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதை எதிர்த்து ரஷ்யா தாக்குதல் நடத்தும் என்று ரஷ்ய பிரதமர் அறிக்கை விடுத்தார். ஐ.நா வில் சிரியாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பல தீர்மானங்களையும் இந்த இரு நாடுகளும் தம்முடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி பல தடவைகள் ரத்து செய்தன.
இப்படி சிரியாவின் மீது அளவ கடந்த பாசத்தை ரஷ்யாவும், சீனாவும் காட்டுவதின் மர்மம் என்னவென்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளைப் பொருத்த வரையில் சிரியாவை இவை இரண்டு நாடுகளும் ஆதரிப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று சிரியாவிலிருந்து கிடைக்கும் குரூட் ஒயில், பெற்றொலியம் மற்றும் பருத்தி ஆகியவற்றின் ஏகபோக சொந்தக்காரர்களாக தாம் இருக்க வேண்டும் என்பது. இரண்டாவது சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் மத்திய கிழக்கில் தமது இருப்தை உறுதி செய்து கொள்வதற்கான ஒரே சந்தர்ப்பம் சிரியாவை ஆதரிப்பதுதான். அதாவது சிரியாவை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதினூடாக மத்திய கிழக்கில் இவ்விரு நாடுகளும் தமது அதிகார பரவலாக்கத்தை மேற்கொள்ள முடியும்.
சிரியா அமெரிக்காவினால் தாக்கப்பட்டு பஷர் அல் அஸாத்தின் ஆட்சி கவிழ்க்கப்படுமானால் ரஷ்யாவினதும், சீனாவினதும் மத்திய கிழக்கு வல்லாதிக்கம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிடும் என்பதினாலேயே சிரியாவுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதலுக்கு தடைக் கல்லாக ரஷ்யாவும், சீனாவும் செயல்படுகின்றனவே தவிர சிரியாவின் பொதுமக்கள் மீது உள்ள பாசமோ அல்லது ஆட்சியாளர்கள் மீதுள்ள பாசமோ அல்ல என்பதே வெளிப்படையான உண்மையாகும்.
இறுதியாக….
எது எப்படியொ அரபுலக முஸ்லிம்களை அழிக்கும் தங்கள் திட்டத்தை எவ்வகையிலேனும் மேற்கு நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு பல வகைகளிலும் தமது முயற்சியை மேற்கொண்டு வருகின்றது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடிகின்றது. முஸ்லிம் தலைவர்கள் இறைவனைப் பயந்து மறுமைக்காக தங்கள் வாழ்க்கையை மாற்றாத வரையில் இது போன்ற நிலைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்