Social Icons

Saturday 10 August 2013

மனைவியின் சொத்தை கணவன் விற்கலாமா?


வாரிசுரிமை மூலமாக தாய் வீட்டிலிருந்து மனைவிக்கு கிடைக்கும் சொத்தை கணவன் விற்கவோ பயன்படுத்தவோ இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதா?

மனைவியின் சொத்துக்கள் அனைத்தும் கணவனுக்குத் தான் சொந்தம் என்ற எழுதப்படாத சட்டம் நமது நாட்டில் நடைமுறையில் உள்ளது தான் இது போன்ற கேள்விகள் எழுவதற்குக் காரணம். 

கணவனுக்கென்று சொத்துக்கள் இருப்பது போலவே மனைவிக்கும் தனியாக சொத்துக்கள் இருக்கலாம். அவள் விரும்பினால் கணவனுக்குத் தனது சொத்திலிருந்து தர்மம் கூட செய்யலாம். அது அவளுடைய சொத்தாக ஆகுமே தவிர அதில் கணவனுக்கு எந்த உரிமையும்  இல்லை என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். 

நான் பள்ளிவாசல் இருந்த போது நபிகள் நாய‌க‌ம் (ஸல்) அவர்கள், 'பெண்களே! உங்களின் ஆபரணங்களிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்' என்று கூறினார்கள். நான் (என் கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும், என் அரவணைப்பில் உள்ள அனாதை களுக்கும் செலவளிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், 'நான் உங்களுக்காகவும், எனது அரவணைப்பில் உள்ள அனாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவு செய்வது தர்மமாகுமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள்' என்று கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்' என்று கூறி விட்டார். எனவே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டு வாயில் ஓர் அன்சாரிப் பெண்ணும் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது பிலால் (ரலி) வந்தார். அவரிடம், 'நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அனாதைகளுக்கும் செலவளிப்பது தர்மமாகுமா? என்று நபிகள் நாய‌க‌ம் (ஸல்) அவர்களிடம் கேளுங்கள். நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம்' எனக் கூறினேன். உடனே அவர் நபிகள் நாய‌க‌ம் (ஸல்) அவர்களிடம் சென்று கேட்ட போது நபிகள் நாய‌க‌ம் (ஸல்) அவர்கள், அவ்விருவரும் யார்? எனக் கேட்டார்கள். அவர், ஜைனப் என்று கூறினார். நபிகள் நாய‌க‌ம் (ஸல்) அவர்கள், எந்த ஜைனப்? என்று கேட்டதும் பிலால் (ரலி), 'அப்துல்லாஹ்வின் மனைவி' என்று கூறினார். உடனே நபிகள் நாய‌க‌ம் (ஸல்) அவர்கள், 'ஆம்! ஜைனபுக்கு இரு நன்மைகள் உண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது. மற்றொன்று தர்மத்திற்குரியது' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜைனப் (ரலி) நூல்: புகாரி 1466

 இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி, தனது சொத்திலிருந்து கணவனுக்குச் செலவு செய்வது தர்மமாகுமா? என்று நபிகள் நாய‌க‌ம் (ஸல்) அவர்களிடம் வந்து கேட்கின்றார்கள். நபியவர்களும் ஆம் என பதிலளித்து அத்துடன் உறவை அரவணைத்ததற்கான நன்மையையும் சேர்த்து இரண்டு மடங்கு கூலிகள் கிடைக்கும் என கூறுகின்றார்கள். 

இதிலிருந்து மனைவியின் சொத்துக்களில் கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை அறியலாம். அவனாக (கணவனாக) மனைவியின் சொத்திலிருந்து எதையும் எடுத்துக் கொள்ள முடியும் அவனுக்கு உரிமை உள்ளது என்றால் கணவனுக்கு தர்மம் அளித்தல் என்ற பேச்சுக்கு இடமிருந்திருக்காது. சிலரை விட சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். திருக்குர்ஆன் 4:32 

எனவே மனைவியின் சொத்தை தன் விருப்பப்படி விற்கவோ பயன்படுத்தவோ கணவனுக்கு உரிமை கிடையாது. மனைவியாக விருப்பம் கொண்டு கணவனுக்கு அதை விற்க அல்லது பயன்படுத்த உரிமை அளித்தால் அப்போது அதை பயன்படுத்துவதில் தவறில்லை. மஹர் எனும் மணக்கொடையை பெண்ணுக்கு அளித்து அதிலிருந்து சிலதை மனமுவந்து மனைவி விட்டுக் கொடுத்தால் அது கணவனுக்கு அனுமதி என்று இவ்வசனம் தெரிவிக்கின்றது. பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! அல்குர்ஆன் 4 4 இதிலிருந்து மனைவி தனது சொத்தை பயன்படுத்த கணவனுக்கு அனுமதி அளிக்கும் போது கணவன் அதை பயன்படுத்தலாம் என்பது தெளிவாகிறது.


                                                                                    onlinepj

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்